அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கின்றார்கள்.நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்."மக்கள் தொழுகைக்கு நேரகா லத்துடன் செல்வதற்குரிய பயனை அறிவார்கள் எனின் அதற்கு போட்டிப் போட்டுக்கொள்வார்கள்."(நூல்,புகாரி,எண், 615.முஸ்லிம்,எண்:437).
ஹதீஸில் வந்துள்ள தஜ்ஹீர் எனும் சொல்லின் அர்த்தம் தொழுகைக்கு நேரக்காலத்துடன் செல்வதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப் பிடும் போது:"ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும்,தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் அவர் ஜமாஅத்துடன் தொழுவது இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.ஏனெனில்,உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து,அதைச் செம்மை யாகவும் செய்து,தொழ வேண்டும் என்ற ஆர்வத்தில்,தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு தகுதி அவருக்கு உயர்த்தப்படுகிறது,இன்னும் ஒரு தவறு அவருக்காக மன்னிக்கப்படுகிறது.அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்து விட்டால்,தொழுகையை எதிர்பார்த்து அவர் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண் டிருக்கும் வரை அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள்."இறைவா! இவருக்குக்கருணை புரிவாயாக!இறைவா!இவருக்கு மன்னிப்பளிப்பாயாக!இறைவா! இவரது பாவ மன்னிப்பை ஏற்பாயாக!" என்று அவர்கள் கூறுகின்றனர்.அவருக்கு சிறு தொடக்கின் மூலம் தொல்லை ஏற்படாத வரைக்கும் (இது நீடிக்கும்."இதை அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல், முஸ்லிம்,எண்:649)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:"தொழுகைக்காக இகாமத் சொல்லப் பட்டால் தொழுகைக்கு ஓடிச்செல்லாதீர்கள்;நிதானத்தைக் கடைப்பிடித்தவாறு (மெதுவாகச்) செல்லுங்கள்.உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப் போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்து கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்."(நூல்,புகாரி,எண் 636.முஸ்லிம்,எண்:602).
இமாம் நவவி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது அஸ்ஸகீனா..... என்பது வீணானவைகளை விட்டும் நீங்கிய நடையின் போதான அமைதியும்,அல் வாகார் என்பது திரும்பிப் பார்க்காதும்,சப்தத்தை தாழ்த்தியும் காணப்படும் நிலையாகும்.(இமாம் நவவியவர்களின் ஷரஹ் முஸ்லிம் ஹதீஸ்,எண்: 602),தொழுகைக்கு தட்டுத்தடுமாறி பரபரப்புடன் செல்லாது அமைதியாகவும், கண்ணியாமாகவும் செல்வது ஸுன்னத்தாகும்.எனும் பாடத்தில்.குறிப்பிடப்பட்டுள்ளது.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் "நீர் பள்ளிக்குள் நுழையும் போது வலது காலை முற்படுத் துவதும் அதிலிருந்து வெள்யேறும் போது இடது காலை முற்படுத்துவதும் ஸுன்னத்து ஆகும்'.(நூல்,அல் ஹாகிம்.1/338.) இதை அவர்கள் இமாம் முஸ்லிம் அவர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப ஸஹீஹான ஹதீஸ் எனவும் குறிப்பிடுள்ளார்கள்.
அபீ ஹுமைத்,அல்லது அபீ உஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்."உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தால் "அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக" எனவும் அதிலிருந்து வெளியேறும் போது "அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபத்லிக" எனவும் கூறட்டும்.(நூல் முஸ்லிம்,எண்:713).
அதாவது ஒருவர் பள்ளிக்குள் நேரகாலத்துடன் வந்து விட்டால் அவர் இரு ரக்அத் துக்கள் தொழாத வரைக்கும் உட்காராது இருத்தல் ஸுன்னத்து ஆகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய ஹதீஸை அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். "உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் அமர்வதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்." (நூல்,புகாரி,எண்-1163,முஸ்லிம்,எண்,714).
ஃபஜ்ர்,லுஹர் போன்று பர்ளான தொழுகைகளுக்கு முன் ஸுன்னத்தான தொழு கைகளாக இருக்குமாயின் அதை நிறை வேற்றலும்,லுஹா தொழுகையின் நேரத்தில் லுஹாதொழு கையையும்,வித்ர் தொழுகையை ஆகியவற்றை பள்ளியில் நிறைவேற்றுதல்,பர்ளான தொழுகையையை பள்ளியில் நிறை வேற்றுதல் போன்றுள்ள தொழுகைகள் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகைக்கு நிகராக போதுமானதாகும்.இவ்வாறுள்ள தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகையின் நோக்கம் பள்ளியில் தொழுவதற்கு முன்னராக உட்காராமல் இருத்தல் ஆகும்.
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கிறார்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கின்றார்கள்."தொழுகையில்-ஆண்களுக்கு மிகச் சிறப்பான அணி, வரிசை முதல் அணியாகும்.மிக மோசமானது இறுதியாகும். மேலும் பெண்களுக்கு மிகச்சிறப்பான அணி,வரிசையின் இறுதியானது மிக மோசமானது முதல் வரிசையாகும்.என்றார்கள்.(நூல்,முஸ்லிம், எண்:440).
மிகச்சிறப்பானது:என்பது அதிக கூலியும்,மகிமையும் மிக்கது என்பதாகும்.மிக மோசமானது:என்பது கூலியிலும்,சிறப்பிலும் குறைந் துள்ளது.என்பதாகும்.
இந்த ஹதீஸின் விளக்கத்தின் படி ஆண்கள்,பெண்கள் என அனைவரும் கூட்டாக ஜமாத்தாக எவ்வித திறையும்,தடுப்புச் சுவறும் இல்லாது தொழும் வேளையிலாகும்.ஆகவே இதன் போது பெண்களுக்கு மிகச்சிறப்பான அணி இறுதி வரிசை, அணியாகும்.ஏனெனில் இதுவே அவர்கள் ஆண்களின் கண்ணிலிருந்து தம்மை மறைத்து கொள்ள மிக ஏதுவானதாக அமையும்.எனினும் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் இடையில் பிரிக்கும் திறைகள்,மதில்கள்,அல்லது இன்றைய காலத்தில் அதிகம் எமது பள்ளிகளில் பெண்களுக்கான பிரத்தியேக தனியான இடங்கள் காணப்படுவது போன்றுள்ள நிலைகளில் ஆண்களின் நெறுக்கத்தை விட்டும் அவர்கள் ஒதுங்கிய நிலையில் உள்ளதால் இதன் போது அவர்களுக்கும் மிகச் சிறப்பான அணி முதல் அணியாகும்.இதன் சட்ட வரையறை தடைக்கான காரணியும்,அக்காரணி இல்லாமல் போவதுமாகும்.மேலும் முதன் அணியின்,வரிசையின் சிறப்பு தொடர்ப்பாக பொதுவாக வந்துள்ள ஹதீஸ்களுமாகும்.இவ்வாறான ஹதீஸ்களில் சில பின்வருமாறு:
இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:'பாங்கு சொல்வதன் நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர்.யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற் பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்.தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள்.ஸுபஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.'என அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(நூல்,புகாரி, எண் :610,முஸ்லிம்,எண்:437)
முன்னர் குறிப்பிடப்பட்டது போன்று மஃம்மூன்களுக்கு-இமாமை பின் தொடர்பவர்கள்-மிகச் சிறப்பான அணி,வரிசை முதல் அணியாகும். பின்னர் இமாமுக்கு வலது இடது புறமாக மிக அண்மித்து நெறுக்கமாக இருப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.இதுவே சிறப்பானதுமாகும்.
இதற்கானசான்றாக பின்வரும் ஹதீஸ் அமைகிறது:அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரை தொட்டும் அறிவிக்கிறார்.ரஸூலுல்லாஹி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்."ஞானம்-கல்வியறிவு- உள்ளவர்களும்,அறிஞர்களும் எனக்கு மிக நெறுக்கமாக இருந்துக் கொள்ளுங்கள்"என (நூற்கள்-அபூதாவுத்,எண்,674),(திர்மிதி,எண்:228). இதில் வந்துள்ள "லியலினி" எனும் அறபு வார்த்தையின் அர்த்தம் என்னை நெறுங்கி வாருங்கள் என்பதாகும்.ஆகவே இவ்வதீஸின் பிரகாரம் இமாமுக்கு எத்திசையிலும் சரி அவருக்கு மிக நெறுக்கமாக அண்மித்து இருப்பது வேண்டப்பட்டதொரு அம்சம் என்பதற்கு இது ஆதாரமாக அமைகிறது.