languageIcon
search
search
brightness_1 உணவின் ஆரம்பத்தில் பஸ்மில் -பிஸ்மில்லாஹ்- கூறல்.

உமர் இப்னு அபீ ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்.நான் ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் உணவு உண்டேன்.தட்டின் ஓரங்களிலிருந்து எடுத்து உண்ணத் தொடங்கினேன். அப்போது இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னிடம்,'உண்ணும் போது அல்லாஹ் வின் பெயரை-பிஸ்மில்லாஹ்-எனகூறுவீராக,இன்னும் வலக் கரத்தால் உண்ணுவீராக.மேலும் உமக்கு போதுமான அளவு சாப்பிடுவீராக.என்று கூறினார்கள்.(நூல்,புகாரி, எண்:5376, முஸ்லிம்,எண்:2022).

மேலும் பிஸ்மில் சொல்வதை மறந்து விட்டால் ஞாபகம் வரும் போது "பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹூ" எனக் கூறிக் கொள்ளல்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "உங்களில் ஒருவர் சாப்பிட்டால் - ஆரம்பத்தில்- பிஸ்மில்லாஹ் எனக் கூறட்டும். அவர் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் அவர் "பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு"என சொல்லிக் கொள்ளட்டும்".(நூல்,அபூ தாவுத்,எண்.3767, அத்திர்மிதி,எண்.1858)முன்னர் குறிப்பிடப்பட்டது போன்று இந்த ஹதீஸை இமாம் அல் பானி அவர்கள் ஸஹீஹ் என குறிப்பிட்டுள்ளார்கள்.

அவ்வாறே மனிதன் ஷைத்தானுக்கு ஒப்பாவாகாது இருக்க அவனது வலக்கரத்தால் உணவு உட்கொள்வான்.மேலும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் பெயரை கூறாத போது அவ்வுணவில் ஷைத்தானும் பங்கெடுத்து கொள்கிறான்.மேலும் ஒருவர் இடக் கரத்தால் சாப்பிட்டால் அல்லது பருகினால் ஷைத்தா னுக்கு ஒப்பாகின்றார்.ஏனெனில் ஷைத்தான் இடக் கரத்தால் தான் சாபிடுகின்றான்.குடிக்கின்றான்.

பின்வரும் ஹதீஸ் இதற்கு சான்றாகும்:-

அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்ல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:இடக்கையால் உண்ணாதீர்கள்.ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்ணவும்,பருகவும் செய்கின்றான்.மேலும் நாஃபிஉ (ரஹ்மதுல்லாஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் அதிகப்படியாக "இடக் கையால் வாங்காதீர்கள்.இடக் கையால் கொடுக் காதீர்கள்"என கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.(நூல், முஸ்லிம்,எண்:2020)

ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் பிரகாரம்,ஷைத்தான் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்து அவரது வீட்டில் தங்குவதற்கும் உணவில் பங்கு கொள்ளவும் அதீத அக்கரை செலுத்துகிறான்.இந்த ஹதீஸில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத் தாரிடம்)"இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்கு மிடமும் இல்லை;உண்ண உணவு மில்லை" என்று கூறுகிறான்.ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடமும் இரவுணவும் கிடைத்து விட்டது"என்று சொல்கிறான்.(நூல்,முஸ்லிம்,எண்:2018)

brightness_1 கீழே சிந்திய உணவை எடுத்து அதில் அழுக்குகள் ஏதும் இருப்பின் அதை நீக்கிய பின் உட்கொள்ளல்.

ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்:அதில் "உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற் கிறான்.மனிதன் உணவு உண்ணும் போதும் அவன் பங்கேற் கிறான்.(உண்ணும் போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் கீழே விழுந்து விட்டால்,அதில் படுவதை சுத்தப்படுத்தி விட்டு,பிறகு அதை உண்ணட்டும்.அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்.சாப்பிட்டு முடித்தவுடன் அவர் தம் விரல்களை உறிஞ்சிக் கொள்ளட்டும்.ஏனெனில், அவரது எந்த உணவில் வளம் (பரக்கத்) இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.(நூல்,முஸ்லிம்,எண்:2033).

இந்த ஹதீஸை உண்ணிப்பாக அவதானிக்கும் போது, நிச்சயம் ஷைத்தான் மனித வாழ்வின் பரக்கத்து, அபிவிருத்தி என அனைத்து விடயங்களிலும் குறுக்கிடவும்,மனிதனின் அதிக செயற்பாடுகளை நாசமாக்கி விடும் பொருட்டு பங்கெடுப்பதில் அதீத அக்கரை கொண்டுள்ளான் என்பது புலப்படுகிறது. ஆகவே ஷைத்தான் மனிதனின் அனைத்து செயற்பாடுக ளிலும் ஒன்றிணைந்து காணப்படுகின்றான்.எனவே தான் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும் போது "நிச்சயமாக ஷைத்தான் உங்களின் அனைத்து கருமங்களிலும் அவன் பங்கு கொள்கின்றான்"என குறிப்பிட்டுள்ளார்கள். 

brightness_1 சாப்பிட்டு முடித்தவுடன் கை விரல்களை உறிஞ்சிக் கொள்வது.சூப்புவது.

அதாவது நாக்கின் நுணியால் சாப்பிட்ட அவரது கை விரல்களை உறகிஞ்சிக் கொள்ளல்-சூப்பிக்கொள்ளல்-. அல்லது  மற்றவரால் உதாரணமாக அவரது மனைவி போன்றோர்களால் சூப்புதல்-.உறிஞ்சுதல்-.இவ்வாறு செய்வதற்கு முன்னராக கை துடைப்பால் அல்லது இவை போன்றவற்றால் துடைக்காமல் இருப்பது தான் ஸுன்னத்தாகும்.

முன் சென்ற ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலான ஹதீஸ் இதற்கான சான்றாக இருக்கிறது.

மேலும் புகாரி,முஸ்லிமில் வரக்கூடிய இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலான ஹதீஸில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும் போது "உங்களில் ஒருவர் சாப்பிட்டு முடித்தால் உங்கள் கையை நீங்கள் அல்லது பிறர் சூப்பாத வரை கையை துடைக்க வேண்டாம்.(நூல்,புகாரி,எண,5456,முஸ்லிம்,எண் 2033).

brightness_1 உணவுத் தட்டை வழித்து உண்ணுதல்.

அதாவது உணவுத்தட்டை வழித்து சாப்பிடுதல் என்பது சாப்பி டுகின்றவர் அவர் உண்ணும் பாத்திரத்தின் ஓரங்களை சுத்தமாக வழித்து சாப்பிடுதல் ஆகும். உதாரணமாக சோறு சாப்பிடக்கூடியவர் உண்ணும் போது உணவுப்பாத்திரத்தில் அவற்றின் எதையும் மிச்சம் வைக்காது பாத்திரத்தின் அனைத்து பகுதிகளையும் வழித்து சாப்பிடுதல்.சில வேளை பரக்கத் அபிவிருத்தி எஞ்சிய அந்தப் பகுதிகளில் கூட இருக்கலாம்.

இதை பின்வரும் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. அதில் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், (உணவு உண்டு முடித்தவர் தம்) தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள்.(நூல்,முஸ்லிம், எண்:2034).முஸ்லிமில் மற்றுமொரு அறிவிப்பில்.அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வாயிலாக.வந்துள்ள ஹதீஸில்."உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்"எனவும் இடம் பெற்றுள்ளது.(நூல், முஸ்லிம், எண்:2035)

எமது ஆசான் அஷ்ஷைக் இப்னு உஸைமீன் ரஹிமஹுல் லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். "அதாவது இதன் அர்த்தம் உமது விரல்களில் ஒட்டியிருக்கின்ற உணவுகளை உறிஞ்சு சாப்பிடுதல். கவலைக்குரிய விடயம் என்னவெனில் இன்று அதிகமானவர்கள் இதையும் தாண்டி மார்க்க அறிவை தேடுபவர்களிடத்திலும் கூட மறந்து போயுள்ள ஒரு ஸுன்னத்தான அம்சமாக காணப்படுகின்றமையாகும். (பார்க்க,ரியாழுஸ்ஸாலிஹீனுக்கான விளக்கவுரை: 1/892).

brightness_1 உணவுப் பாத்திரத்துக்கு வெளியில் மூன்று முறை மூச்சு விடல்.

பாத்திரங்களிலிருந்து அருந்தும் போது மூன்று தடவைகளாக அருந்துவதும்,ஒவ்வொன்றின் போதும் மூச்சு விடுவதும் ஸுன்னத்து ஆகும்.

இதற்கான சான்றாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் சான்றாக இருக்கின்றது.அதில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (பருகும் போது) மூன்று முறை பாத்திரத்தி(ற்கு வெளியி)ல் மூச்சு விட்டு(ப்பருகி) வந்தார்கள்.மேலும், "இதுவே நன்கு தாகத்தைத் தணிக்க கூடியதும் (உடல்நலப்) பாது காப்பிற்கு ஏற்றதும் அழகிய முறையில் செரிக்கச் செய்யக்கூடியதும் ஆகும்"என்று கூறினார்கள்.ஆகவேதான்,நானும் பருகும் போது மூன்று முறை மூச்சு விட்டு(ப்பருகி) வருகிறேன். (நூல், புகாரி,எண்:5631,முஸ்லிம்:2028).

பாத்திரத்தில் மூச்சு விடல் என்பதனால் நாடப்படுவது பாத்திரத்திலிருந்து அருந்தும் போது அதனுள் மூச்சு விடாது பாத்திரத்துக்கு வெளியில் மூச்சு விடுவார். ஏனெனில் புகாரி முஸ்லிமில் அபீ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸின் பிரகாரம் பாத்திரத்தில் மூச்சு விடுவது மக்ரூஹ் - வெறுக்கப் பட்டது-ஆகும். அதில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடும் போது "உங்களில் ஒருவர் குடிபானம் அருந்தினால் பாத்திரத்தினுள் மூச்சு விடவேண்டாம்."(நூல்,புகாரி,எண்:5630,முஸ்லிம்,எண: 267).

brightness_1 உணவருந்திய பின்னர் அல்லாஹ்வை - அல்ஹம்து லில்லாஹ் என- புகழ்தல்.

பின் வரும் ஹதீஸ் இந்த ஸுன்னாவை குறித்துக்காட்டுகிறது:-

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்."நிச்சயமாக ஒரு அடியான் ஒரு கவலை உணவு அருந்திய பின்னர் அதற்காக நன்றி செலுத்து வதை,அல்லது ஒரு மிடல் தண்ணீர் அருந்திய பின் அல்லாஹ்வை புகழ்வதை அவன் பொறுந்திக் கொள்கிறான்" .(நூல்,முஸ்லிம்,எண்:2743)

அல்லாஹ்வை புகழ்வதற்கான வார்த்தை வடிவங்கள் பல்வேறுபடுகின்றன.அவற்றுள்.

அ-'அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா'.(நூல்,புகாரி,எண்:5458)

ஆ-'அல்ஹம்துலில்லாஹில்லதீ கஅபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூரின்'.(நூல்,புகாரி,எண்: 5459)

(ஃகைர மக்ஃபிய்யின்):அதாவது ஒருவர் மீதும் தேவயற்றவன், அவனே அவனது அடியார்களுக்கு உணவளிப்பவனும் போதுமானவனும் ஆவான்.

(வலா முவத்தஇன்):விடுபடாதவன்.

(கஅபானா):போதுமானது எனும் சொல்லின் கருத்தாகும்.

(அர்வானா):அர்ரய்யி-நீர் புகட்டல் எனும் சொல்லிருந்துள்ளதாகும்-

(மக்ஃபூரின்):அவனின் அருட்கொடைகளையும்,சிறப்புக் களையும் மறுக்காத.

brightness_1 உணவு விருப்பத்துக்குரியதாயின் அதை புகழ்துரைத்தல்.

உணவு விருப்பத்துக்குரியதாக காணப்படும் போது அதை புகழ்துரைப்பது ஸுன்னத்து ஆகும்.மேலும் சந்தேகத்துக்கு இடமின்றி இதில் உள்ளவற்றையே அவர் புகழ்ந்துரைக்கிறார்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்:(ஒருமுறை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள்.அதற்கு வீட்டார்,"நம்மிடம் காடி மட்டுமே உள்ளது" என்று கூறினர்.நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் காடியைக் கொண்டு வரச் சொல்லி அதை(த்தொட்டு)க்கொண்டு உண்ணலா னார்கள். மேலும், "குழம்புகளில் அருமையானது காடியாகும்" என்றும் சொன்னார்கள்.(நூல்,முஸ்லிம், எண்:2025).இதில் வந்துள்ள -கல்லு- எனும் அறபு வார்த்தையின் அர்த்தம்.இன்று எம்மிடத்தில் காணப் படக்கூடிய வினாகர் போன்று.புளிப்புச் சுவை அற்ற இனிப்பான ஒருவிதமான குழம்பு வகையாகும்.

ஆசிரியர் அஷ்ஷைக் பின் உஸைமீன் ரஹிமஹுல் லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது -இதுவும் நபிகளாரின் வழி காட்டலில் உள்ள அம்சமாகும்.உணவு உமக்கு விருப்பத்துகுரியதாயின் உதாரணமாக ரொட்டியை பார்த்து இவர் செய்த இந்த தொளிக் கோதுமை ரொட்டி இவ்வளவு நல்லதாக,சுவையாக இருக்கின்றதே...எனவும் இதை போன்றும் அதை புகழ்ந்துரைத்தல் என்பதுவெல்லாம் நபிகளாரின் ஸுன்னத்தான வழிகாட்டலாகும்.(பார்க்க:அர்ரியாளுஸ் ஸாலிஹீன் நூலுக்கான விரிவுரையில்.(2/1057)

எனினும் இன்றைய நிலையை உற்று நோக்குபவர் மனிதர்களில் அதிகமானவர்கள்.இந்த ஸுன்னாவை விட்டு விடுவது மாத்திரமல்லாது இந்த ஸுன்னாவுக்கு மாற்றமாக அவர்கள் உணவுகளை குறைகூறியும் சில வேளைகளில் அதை இகழ்ந்துரைப்பதையும் காண முடிகிறது.இதுவெல்லாம் நபிகளாரின்ஸுன்னாவுக்கும் வழிகாட்டலுக்கும் மாற்றமானது.புகாரி,முஸ்லிமில் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக வந்துள்ள ஹதீஸில் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஒரு போதும் அவர்கள் உணவை குறை கூறியதில்லை,அவர்கள் விரும்பினால் உண்பார்கள,இல்லாது விட்டால் உண்ணாது விட்டு விடுவார்கள்.(நூல் புகாரி,எண்:3563, முஸ்லிம்,எண்: 2064).

brightness_1 உணவளித்தவருக்கு பிரார்த்தனை செய்தல்.

இதை அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் தெளிவு படுத்துகிறது:அதில் (ஒருமுறை) அல்லாஹ் வின் தூதர் (ஸல்ல்லல்லாஹு அலைஹி வஸ்லம்) அவர்கள் என் தந்தை (புஸ்ர் பின் அபீபுஸ்ர்-ரலியல் லாஹு அன்ஹு) அவர்களிடம் (விருந்தா ளியாகத்) தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் (பேரீச்சம் பழம்,பாலாடை,நெய் ஆகிய வற்றால் செய்யப்பட்ட "வத்பா"எனும்) ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள்.பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டன.அல்லாஹ்வின் தூதர் (ஸல்ல்லல்லாஹு அலைஹி வஸ்லம்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு விட்டு,அவற்றின் கொட்டைகளை (பாத்திரத்தினுள்ளே போடாமல்) தம்மிரு விரல்களுக்கிடையே வைத்திருந்(து விட்டு பிறகு வீசியெறிந்)தார்கள்.பிறகு ஒரு பானம் கொண்டு வரப்பட்ட போது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்ல்லல் லாஹு அலைஹி வஸ்லம்)அவர்கள் அதையும் அருந்தினார்கள்.பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள்.பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்ல்லல்லாஹு அலைஹி வஸ்லம்)அவர்கள் புறப்படத் தயாரான போது) என் தந்தை,அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லம்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, "எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்"என கூறினார்கள்.அப்போதுஅல்லாஹ் வின் தூதர் (ஸல்ல்லல்லாஹு அலைஹி வஸ்லம்) அவர்கள் "இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் அருள் வளம் (பரக்கத்) புரிவாயாக! இவர்களை மன்னித்து,இவர்களுக்குக் கருணை புரிவாயாக!"(அல்லாஹும்ம,பாரிக் லஹும் ஃபீமா ரஸக்த்தஹும்,, வஃக்ஃபிர் லஹும், வர்ஹம்ஹும்) எனப் பிரார்த் தித்தார்கள்.

brightness_1 பானங்களை அருந்தும் போது அதை பருகுபவர் அவரது இடப்பக்கத்துக்கு முன் வலப்புறத்தை முற்படுத்தல் ஸுன்னத்தும் ஆகும்.

அதாவது இதனால் நாடப்படுவது -பலரும் பானங்களை- அறுந்தும் போது முதலில் உள்ளவர் குடித்து முடித் தவுடன் தமது இடப்பக்கத்தில் உள்ளவருக்கு முன்னராக தமது  வலப் புறத்தில் உள்ளவருக்கு கொடுப்பது தான் ஸுன்னத்து ஆகும்.

இதை பின் வரும் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. அதில் அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்த போது,அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டார்கள்.ஆகவே,அவர்க ளுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலைக் கறந்தோம்.பிறகு எனது இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து,அதில் கலந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொடுத்தேன்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருந்தி னார்கள்.அப்போது அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபியவர்களின் இடப் பக்கத்திலும்,உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபியவர்களின் முன் பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபியவர்களுக்கு வலப் பக்கத்திலும் இருந்தனர்.அப்போது உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,"இதோ அபூபக்ர் (அவருக்கு மீதியுள்ள பாலைக் கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று (இடப்பக்கத்திலிருந்த) அபூபக்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் காட்டிக் கூறினார்கள்.எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (வலப்பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள்.அபூபக்ர் (ரலியல் லாஹு அன்ஹு) அவர்களுக்கும் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் கொடுக்கவில்லை.மேலும் "(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கத்தில் இருப்பவர்களே(முன்னுரிமையுடையவர்கள்).வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்) வலப் பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடைய வர்கள்)" என்று கூறினார்கள்.(இறுதியில்) அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,"இதுவே நபிவழி யாகும்;இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்" என்று கூறினார்கள்.(நூல்,புகாரி, எண்:2571,முஸ்லிம், எண்:2029)

brightness_1 பானங்களை -புகட்டுபவர் கூட்டத்தில் இறுதியாக பருகுதல் வேண்டும்.

கூட்டத்திலுள்ளவர்களுக்கு பானங்களை புகட்டுபவர் அவர் இறுதியாக பருகுவது ஸுன்னத்து ஆகும்.

இதற்கான அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலான ஹதீஸ் சான்றாக இருக்கிறது. அந்த நீண்ட ஹதீஸில் கூறுகின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைவருக்கும் பானத்தை ஊற்றி புகட்டினார்கள்.அதில் நானும் அல்லாஹ் வின் தூதரும் மாத்திரம் தான் எஞ்சியிருந்தோம்,பின்னர் நபியவர்கள் பானத்தை ஊற்றி "நீர் பருகுவீராக" என எனக்கு கூறினார்கள்.அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் பருகாத வரை நான் பருக மாட்டேன் என கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் "நிச்சயமாக ஒரு -கூட்டத்துக்கு- பானங்களை புகட்டுகின்றவர் அவர்களில் இறுதியாக தான் பருக வேண்டும்"என கூறினார்கள்.அபூ  கதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள் நான் பானத்தை பருக அல்லாஹ்வின் தூதர் அவர்களும் பருகினார்கள்.(நூல்,முஸ்லிம்,எண்:681)

மேலதிகமாக - ஒருவர் பால் அருந்தினால் அதை அருந்திய பின்னர் அதன் கொழுப்பு நீங்குவதற்காக தண்ணீரால் வாய் கொப்பளித்து கொள்வதும் ஸுன்னத்து ஆகும்.இதை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் அறிவிக்கின்றது.அதில் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பால் அருந்திய பின்னர் தண்ணீரை கொண்டு வரச்செய்து அவர்களது வாயை கொப்பளித்து பின்னர் "இதில் கொழுப்பு உள்ளது" என கூறினார்கள்.(நூல்,புகாரி,எண் 211,முஸ்லிம்,எண்:358).   

brightness_1 இரவின் போது அல்லாஹ்வின் பெயரை-பிஸ்மில்லாஹ்- என கூறி பாத்திரங்களை மூடி விடல்.

இரவின் போது திறந்துள்ள பாத்திரங்களை மூடி விடுவதும்,இதன் போது அல்லாஹ்வின் பெயர் கூறலும் ஸுன்னத்து ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "பாத்திரங்களை மூடிவையுங்கள்;தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள், திடமாக வருடத்தின் ஒரு இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது.ஆகவே அது மூடியில்லாத பாத்திரங்களையும் சுருக்கிட்டு மூடி வைக்காத தண்ணீர் பைகளையும் கடந்து செல்லும் இதன் போது அந்நோயின் சிறதளவேனும் இவற்றுள் இறங்காம லிருப்பதில்லை.(நூல் முஸ்லிம்,எண்:2014)

மற்றும் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு வாயிலாக புகாரியில் வரக் கூடிய மற்றுமொரு அறிவிப்பில் பாத்திரங்களை மூடி வையுங்கள்;இதன் போது அல்லாஹ்வின் பெயரை சொல்லுங் கள்,மேலும் பாத்திரங்களை கவிழத்து விடுங்கள் இதன் போதும் அல்லாஹ்வின் பெயரை கூறுங்கள்.இவ்வாறு பாத்திரங்களை முழுமையாக மூடி விட முடியாத போது பாத்திரத்தின் மீது குச்சியைக் குறுக்காக வைத்து விடுங்கள்" (நூல்,புகாரி,எண்:5623)